வெளியிடப்பட்ட நேரம்: 24-Aug-2020 , 08:35 AM

கடைசி தொடர்பு: 24-Aug-2020 , 08:37 AM

அவன் ஒரு சுழல் - 20

cover

கைகளை பற்றிய படி சொன்னான். "தமிழ் ஐ லவ் யூ"

எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தேன். சிரிக்கவும் இல்லை. அவனை வெறுக்கவும் இல்லை. இங்கு வருவதற்காக அவன் அழைத்த போது, அவன் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலிருந்தேன். வரும் வழியில் சில விசயங்கள் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் மனதை குழப்பி போட்டிருந்தது.

அவனோடு நான் சேர்வதில் ஏதோ சகுனத் தடை போல. அவனை முதன் முதலாக பார்க்கும் போது என் உயிர் என்னை பிரிந்துக் கொண்டிருந்தது. அவன் என் மனதை ஆக்கிரமிக்க தொடங்கிய போது ஏதோ ஒரு கெட்ட கனவு. அவன் காதலை சொல்ல வந்த போது, அவன் வீட்டில் எதையும் புரிந்துக் கொள்ள முடியாத சூழல்.

இன்று உயிர் பயம் காட்டிவிட்டு மீண்டும் காதலை கையிலேந்தி கொடுக்கிறான்.
மனதிற்குள் எண்ணங்கள் அலை அலையாய் தொடர்ந்து கொண்டிருந்தது.
அவன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான். எங்கள் கைகள் இன்னும் பிரியவில்லை.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ? சட்டென்று நிசப்தம் உணர்ந்து சுய நினைவிற்கு வந்தேன். அவ்வளவு நேரம் திருவிழா கூட்டம் போல சத்தமாய் இருந்த அந்த இடத்தில் அலைகளின் ஓசை மட்டும் மிச்சமிருந்தது. அங்கு யாருமே இல்லை.
டீக்கடை இருந்ததற்கான தடயம் கூட இல்லை. பாதி நிலவின் ஒளியை தவிர எந்த வெளிச்சமும் இல்லை. அங்கே கடல் இருக்கிறதென்பதே அலைகளின் சத்தத்தில் தான் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு இருட்டு.

அவன் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் பயமாக இருந்தது. கனவில் இருக்கிறோமா?, இல்லை நாம் தான் கற்பனை செய்து கொள்கிறோமா? என்றெல்லாம் எனக்கு தோன்றியது. சுற்றி பார்த்தேன். ப்ளாஸ்டிக் கப்புகளோ, எச்சில் தட்டைகளோ, ஏன் பேப்பர் துண்டுகள் கூட அங்கு இல்லை.
அப்படியானால், இஞ்சி டீ, டீக்கடைகாரர், சுற்றியிருந்த மக்கள் எல்லாமே கற்பனையா?

நிஜம் எதுவென்று நம்ப முடியாமல் அந்த திறந்தவெளியிலும் எனக்கு மூச்சு முட்டியது.

"தம்பி… ரொம்ப இருட்டிருச்சு. சீக்கிரமா கிளம்பிருங்க. களவாணி பசங்க சுத்துற இடம்."

தூரத்தில் ஒரு குரல் கேட்டது. ஒரு சின்ன மண்ணெண்ணெய் விளக்கை மட்டும் தானே நகர்ந்து கொண்டிருந்தது.

"யாரது?"

"டீக்கடை அண்ணாச்சி, கடைய மூடிட்டு போறாரு."

"புரியல."

"என்ன புரியல." அவனுக்கு தான் உண்மையிலேயே எனக்கு என்ன ஆனதென்று புரியவில்லை.

"அவரோடது தள்ளுவண்டி கடை. வியாபாரம் முடிஞ்சு இவ்ளோ நேரமா இந்த இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு கடைய தள்ளிக்கிட்டே போறாரு."

"ஓ.. "

" நாம ரெண்டு பேரும் கிளம்புவோமா?, இல்ல இங்கையே தங்கிடுவோமா?"

"கிளம்புவோம்." எனக்கு இப்போது லேசாக தெளிவானாலும் இன்னும் குழப்பமாகவே இருந்தது. அவன் தன் செல்போனில் டார்ச்சை ஒளிர விட்டான். அவன் டார்ச்சை ஆன் செய்ய செல்போனை எடுத்த போது மணி பார்த்தேன். ஏழு முப்பது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சுயநினைவில்லாம இருந்திருக்கோம்.

காருக்கு நடந்து சென்றோம். காரின் அருகில் சென்றதும், "வரும் போது பண்ணின மாதிரி மறுபடியும் வேகமா ஓட்டினா, கார்ல இருந்து குதிச்சிருவேன்." என்றேன்.

"ஹாஹாஹா சரி சரி மெதுவாவே போலாம்." கார் புறப்பட்டது.

"பார்த்தி… எனக்கு என்ன ஆச்சு?"

"உங்களுக்கு என்ன ஆச்சு? நல்லா தானே இருக்கீங்க."

"இல்ல. எனக்கு என்னமோ ஆச்சு. நாம சன் செட் பார்க்க வந்தோமா? டீக் குடிச்சோமா? அப்புறம் நீங்க என் கைய பிடிச்சு ப்ரப்போஸ் பண்ணீங்களா? "

ஒரு குழந்தை கதை சொல்வதை போல சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவன் ஒரு தாய் உற்சாகமாக கதை கேட்பது போல ”ம்... ம்...” கொட்டி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் லேசாய் சிரிக்கவும் செய்தான். என்னால் தொடர முடியாமல் அமைதியானேன்.

"சொல்லுங்க தமிழ். நான் ப்ரப்போஸ் பண்ணேன். நீங்க பதில் எதுவும் சொல்லல. அதோட சிரிக்க கூட செய்யல."

"ம்ம்.. ஒண்ணுமில்லை விடுங்க."

"இப்போ பதில் சொல்ல போறீங்களா? இருங்க வண்டியை ஓரமா நிறுத்துறேன்."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை." அவன் அப்படி சொன்னதும் எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது. கொஞ்சம் பதட்டமாகி விட்டேன்.

"எனக்கு பசிக்குது பார்த்தி. சாப்பிடுவோமா? " நல்ல வேள டாபிக்க மாத்திட்டோம். அப்பாடாவென்று இருந்தது.

"சரி சொல்ல வந்தத சொல்லுங்க, என்னாச்சு? "

"அது வந்து பார்த்தி நாம சன் செட் பார்க்க வந்தோமா? டீக் குடிச்சோமா? அப்புறம் நீங்க என் கைய பிடிச்சு ப்ரப்போஸ் பண்ணீங்களா?"

அவன் இந்த முறை விழுந்து விழுந்து சிரித்தான்.

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=hes-a-spin-part-19-by-butterfly&i=10549

Related Articles